தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் பிரபலமான அரசியல்வாதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அரசியல்வாதியொருவரின் தன்னிச்சையான செயற்பாடுகளால் மூத்த அரசியல் கட்சியொன்று தன் இருப்பையிழந்து இன்று மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடி வருகின்றது.
அக்கட்சியின் சாபமே அவ் அரசியல்வாதிதான் என விவரம் அறிந்த பலர் கூறுகிறார்கள்.மூத்த தமிழ் அரசியல் கட்சியை முகவரி அற்றதாக ஆக்கிவிட்டார். தன்னுடைய தலைமைப் பதவி ஆசையில் அனைத்தையும் உடைத்து சிதற செய்துள்ளார்.
கட்சியின் தலைமைப் தேர்தல் இடம்பெற்று ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட அதனை ஏற்றுக் கொள்ள விடாது நீதிமன்றம் வரை கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும். தன்னுடைய ஆதிக்கத்தில் முழுக்கட்சியையும் வைத்திருக்க வேண்டும் என்ற பேராசையின் காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் கட்சியில் இருந்த ஏனைய உறுப்பினர்கள் அனைவரும்பிரிந்து ஆளுக்கொரு பக்கம் சென்று விட்டார்கள்.
தற்போது தன் மீது பிழையில்லை என்பது போலவும் தமிழ் தேசியமே தன்னை நம்பி இருப்பது போலவும் காட்டிக் காட்டிக்கொண்டு வாரத்திற்கு ஒரு முறை ஊடக சந்திப்புகளை மேற்கொண்டு தான் இருப்பதை நினைவுப்படுத்திக் கொண்டு இருக்கின்றார். இவரின் இந்த மறைமுக போலித்தன அரசியலின் காரணமாகவே எமது தாயக மக்கள் அவரை கடந்த தேர்தலில் புறக்கணித்து விட்டார்கள்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட தான் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் என சொல்லி இருப்பினும் தேசிய பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்திற்கு செல்ல கடும் பிரயத்தனங்கள் மேற்கொண்டார் ஆனால் அது பயனளிக்கவில்லை. இருப்பினும் தன் பேச்சுக்கு இசைந்து நடக்கக்கூடிய ஒருவரையே தேர்வு செய்து நாடாளுமன்றம் அனுப்பி இருக்கின்றார் என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது ராஜதந்திர அரசியல் நகர்வுகள் காரணமாகவும் தலைமை பதவிக்கான ஆசை மற்றும் தன் சார்பானவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கல் போன்ற தன்னிச்சையான அரசியல் முடிவுகள் அவரின் அரசியல் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும்.தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமிழ் மக்களில் தானும் ஒருவன் என்பதை பொய்யாகக் கூறி தன்னை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக காட்டிக்கொள்ள முயற்சித்தவருக்கு தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
இப்போலி அரசியல்வாதியை கடந்த தேர்தலில் மக்கள் புறக்கணித்தது போன்று இவரை சார்ந்திருக்கும் இவருக்கு இசைந்து செயற்படும் ஏனைய அரசியல்வாதிகளையும் புறக்கணிக்க வேண்டும். இல்லையென்றால் எமது தமிழ் மக்களையும் அவர்களின் ஒற்றுமையையும் கூறுப்போட்டு விற்றுவிடுவார்கள்.
தேர்தலில் தோல்வியுற்ற பழைய அரசியல்வாதிகள் அனைவரும் இணைந்து ஒரே அணியில் செயற்படுவோம் என அறைகூவல் விடுத்துக்கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எமது மக்களுக்கு ஒரு வேண்டுகோள்! மீண்டும் மீண்டும் இந்த கள்வர்களின் வெற்றுப் பேச்சை நம்பவேண்டாம். இதுவரை காலமும் ஒன்றிணைந்து எமக்காக செயற்படாதவர்கள் இனிவரும் காலத்தில் செயற்படப் போகிறார்களா?
தென்னிலங்கை மக்கள் எவ்வாறு இவ்வாறான போலி அரசியல் கள்வர்களை தூக்கி எறிந்தார்களோ அதே போன்று தமிழ் மக்களாகிய நாமும் இவ்வாறான நபர்களை தூக்கி எறிந்து விட்டு தாயகத்தை தூய்மைப்படுத்துவோம்