திருகோணமலை மாவட்ட திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் முன்பாக இன்று(03.01.2025) இடம்பெற்றுள்ளது.
முத்து நகர் பகுதியில் உள்ள விவசாய காணிகளை சூரிய மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்க வேண்டாம் என கோரி குறித்த போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முத்து நகர் ஒன்றிணைந்த அனைத்து விவசாய சம்மேளனங்கள் மேய்கொண்டிருந்தனர்.
குறித்த முத்து நகர் பகுதியில் ஐந்து சிறு குளங்களை கொண்ட 1600ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் 1200 விவசாயிகள் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 50ஏக்கருக்கும் மேற்பட்ட மேட்டு நிலப் பயிர்களுக்கும் இதில் மேற்கொள்ளப்பட்டு சுமார் 5000 குடும்பங்கள் பயனடைகின்றனர்.
கடந்த வருடத்தில் (2024) வாரி சௌபாக்கியா திட்டத்தின் கீழ் அரசாங்கம் குளங்களை திருத்த நிதி ஒதுக்கீடு செய்தது தகரவெட்டுவான் குளம் 80 வீதம் திருத்தப்பட்ட நிலையில் இலங்கை துறைமுக அதிகார சபையால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், அம்மன் குளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு திருத்தம் செய்ய அனுமதியை மறுத்து தடுத்து நிறுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பின்வருமாறு மனு ஒன்றினையும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொசான் அக்மீமன , சண்முகம் குகதாசன் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரிடத்தில் கையளித்துள்ளனர்.