நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் வழமைக்கு!

user 11-Feb-2025 இலங்கை 106 Views

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் மீண்டும் தேசிய மின்னோட்டத்தில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக CEB இன் பொறியியலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

மறுசீரமைப்புப் பணிகள் முன்னேற்றமடைவதால், வரும் நாட்களில் தற்போது நிலவும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு குறைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, திங்கட்கிழமை (10) மற்றும் செவ்வாய் (11) ஆகிய நாட்களில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும், பிற்பகல் 03.30 தொடக்கம் இரவு 09.30 மணிவரையான நேரத்தில் ஒன்றரை மணிநேர மின்வெட்டினை சுழற்சியில் முறையில் நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

பெப்ரவரி 09 அன்று, இலங்கை முழுவதும் பரவலான மின்சாரத் தடையை எதிர்கொண்டது, இது முற்பகல் 11.15 மணியளவில் முழு நாட்டினையும் பாதித்தது.

பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் காலை 11:30 (06.00 GMT) மணியளவில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருந்த குறைந்த மின்சாரத் தேவையின் காரணமாக மின் மறுசீரமைப்பு செயல்முறை சிரமங்களை எதிர்கொண்டது.

எவ்வாறாயினும், மாலை 6.00 மணியளவில் மின்சாரம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்ட நிலையில், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது.

அங்கு மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்தமையினால், தேசிய மின்கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் இழப்பு ஏற்பட்டதுடன் மின் பற்றாக்குறையை அதிகப்படுத்தியது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மேலும் மின் தடை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி