அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

user 12-Feb-2025 இலங்கை 58 Views

இம்முறை வரவு செலவு திட்டத்தில், அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோசலிச மக்கள் முன்னணியின் செயலாளர் வைத்தியர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சோசலிச மக்கள் முன்னணி நேற்று(11) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,'' அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் 20ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கடந்த அரசாங்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்கள், அதனை இந்த முறை வரவு செலவு திட்டத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்கள் மற்றும் சேவை கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளை கருத்திற்கொள்ளும்போது அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

புதிய அரசாங்கம் நியமிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டுக்குள் இருந்து வந்த பணவீக்க நிலைமையை கருத்திற்கொண்டு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளுமாறு அரச துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க போராட்டம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கி செயற்பட்டுவந்த மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க தலைவர்கள் தற்போது அமைச்சுப்பதவி வகித்து வருகின்றனர். அதனால் அவர்களின் அமைச்சுப்பதவியை உயர்வாக கருதி அரச ஊழியர்களின் சம்பளத்தை 20ஆயிரம் ரூபாவால் அதிகரிக்குமாறு கோருகிறோம்.

எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி 7அம்ச கோரிக்கை ஒன்றை பொது சேவை தொழிசங்க சம்மேளனம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்வைத்திருக்கிறது.

அதில் நீண்டகாலமாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்காமல் இருப்பது தொடர்பில் குறிப்பிட்டிருக்கிறோம்.

மேலும் நாட்டின் மொத்த தொழிலாளர்களின் பெரும்பான்மை ஊழியர்கள் அரசசார்பு மற்றும் தனியார் துறைகளிலே இருந்து வருகின்றனர்.

தற்போதுள்ள பணவீக்க நிலைமையில் அவர்களின் தனிப்பட்ட பொருளாதாரம் விழ்ச்சியடைந்துள்ளதுடன் 2023 குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கைக்கு அமைய 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 66,000 ரூபாவுக்கும் அதிகமாகும்.

இந்த அறிக்கையை கருத்திற்கொண்டு அரச சார்ப்பு மற்றும் தனியார் துறையின் அடிப்படை சம்பளத்தை 50ஆயிரம் ரூபாவாக்குமாறு கோருகின்றோம்.

மேலும், இந்த கோரிக்கைகளுடன் அரச ஊழியர்களின் கொடுப்பனவு, அவர்களின் சம்பள முரண்பாடு, அரச துறைக்கு இணைத்துக்கொள்ளல் மற்றும் பதவி உயர்வு மற்றும் அரச சொத்துக்கள விற்பனை செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் எமது யோசனையை ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கிறோம்.''என கூறியுள்ளார்.  

Related Post

பிரபலமான செய்தி