ஆபத்தான பாதையில் பயணிக்கிறதா தாயகம்?

user 13-Feb-2025 கட்டுரைகள் 139 Views

மதவாதம் , இனவாதம் அற்ற கொள்கையினை அங்கீகரித்து மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். மக்கள் நலனை இனவாத கருத்துக்களினூடாக கட்டி எழுப்ப முயன்ற கள்வர்களும் இல்லாமல் போயுள்ளார்கள் ழஆனால் மீண்டும் மதவாதத்தின் பெயரில் நாடு இருளை நோக்கி பயணிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

 

எமது தாயகமான வடகிழக்கில் கட்டப்பட்ட விகாரை  ஒன்று இன்று பேசும் பொருளாகியுள்ளது .மேலும் இங்கு பலர்  விகாரையை இடிப்போம் என முழக்கமிட்டு வருவதும் அதற்கு ஓரணியாக  போராட்டத்திற்காக ஒன்று சேர்வதும் தற்போது இடம் பெற்று வருகின்றது. தாயகத்தில் உள்ள பல்வேறு சங்கங்களும் அமைப்புகளும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் வருகின்றன.

 

நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் எனும் வகையில் அது ஏற்றுக்கொள்ளக் கூடியது. எனினும் தற்போது அந்நிலத்தின் ஒரு வழிபாட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. சமயரீதியாக நோக்கும் போது அது ஒரு புனித ஸ்தலமாகும் .அதனை இப்போது இடிப்போம்  என கூறுவது எமது சமூகத்தின்  மரியாதையை எமது சமூகத்தின் உயர்வை நாமே குறைத்துக் கொள்ளும் செயலாகும்.

 

ஒன்றை மாத்திரம் முன் வைக்கின்றேன். இவ்விகாரைகளுக்கான கட்டுமான வேலைகள் ஆரம்பித்த பொழுது அதனை சுட்டிக்காட்டி போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தாதவர்கள் இன்று கட்டியெழுப்பி வேலைக் முழுமையாக முடிவடைந்த பின்னர் அதனைப் பற்றி  பேசி போராட்டங்களை முன்னெடுப்பது முற்றிலும் அரசியலாகும்.

 

தாயக மீனவர் விவகாரம் , காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் விவகாரம் , சட்டவிரோத மணல் கடத்தல் விவகாரங்கள், அதிகரித்துள்ள போதைப்பொருள் விற்பனை என்ன தொடரும் எத்தனையோ விடயங்களுக்காக ஒன்றிணையாத தமிழரசியல் கட்சிகள் அனைத்தும் இன்று இவ்விடயத்திற்காக ஒன்றுபட்டு இருப்பது ஆச்சரியத்துக்குரியது.

 

2009 ஆம் ஆண்டு போரில் எமது உறவுகள் உயிரிழந்த போது எமது தமிழரசியற்  கட்சிகள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தி அதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம் அல்லது சர்வதேச மட்ட பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்து போர் இடம்பெறுவதற்கு  முன்னரே தடுத்து நிறுத்தி இருக்கலாம் . ஆனால் அப்போது அவர்கள் எதனையும் செய்யவில்லை. அன்று ஒன்றுப்பட்டு செயற்படாத இவர்கள் தற்போது தங்கள் அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக இவ்வரசியல் நாடகத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

நான் நடுநிலையாகவே கருத்தை முன்வைக்கிறேன்.இன்று இவர்கள் கையில் எடுத்திருப்பது சாதாரண விடயம் அல்ல .இதை மிகப் பெரிய தூர நோக்கோடு சிந்திக்க வேண்டும். இன்று வடக்கில் ஒரு விகாரை இடிக்கப்படும் எனில் தென்னிலங்கையில் இருக்கும் கோவில்களை இடிக்கக் கோரி அங்குள்ள மக்கள் போராட்டத்தில் இறங்கினால் மீண்டும் நாட்டின் அமைதி என்னவாகும்?  மீண்டும் தேசிய ஒற்றுமை என்பது பாதாளம் நோக்கி திரும்பும் அல்லவா? தற்போது ஒற்றுமையாக இருக்கும் இனங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் அல்லவா?  மூன்று தசாப்த காலத்தில்  நாம் இழந்தவை போதாதா?

 

அரசியல் ரீதியான ஒன்றிணைவு என்பது மக்களை நல்வழிப்படுத்தி நல்ல விடயங்களில் வழிநடத்தி  மக்கள் நலனை பெற்றுக் கொடுப்பதாகும்.  அதனை விட்டு மக்களின் மத்தியில் இனவாதத்தை தூண்டிவிட்டு அதில் அரசியலாபம்  தேட முனையும்  நபர்களை என்ன சொல்வது ??? இன்று யோசிக்காமல் சிலர் முன்னெடுக்கும் செயற்பாடுகளால் எதிர்காலம் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். சற்று சிந்தித்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

Related Post

பிரபலமான செய்தி