யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (Jaffna Teaching Hospital ) தாதியர்கள் அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்ற வருகிறது.
தமது கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்க தவறும் பட்சத்தில் நாடாளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை நடத்த அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்.
வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமை மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தாதியர்களினால் வைத்தியசாலைகளுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு (District General Hospital Vavuniya) முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஒரு மணி நேர பணிப்புறக்கணிப்பிலும் தாதியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது அரசே தாதியர்களிற்கு பட்ஜெட்டில் சரியான நீதியை பெற்றுக் கொடு , 24 மணிநேரம் 365 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு குறைத்து ஏன் போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் புதிய அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27.02.2025 கிளிநொச்சி வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்பட்டனர்.
மாவட்ட பொது வைத்தியசாலையின் தாதியர்கள் இன்று மதிய உணவு வேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்ட போதும் போராட்டத்தால் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் தங்களின் போராட்டதை முன்னெடுத்துள்ளார்கள்.
நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டமானது இன்று வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளதாக சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காது என்றும் நாலக ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.
வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானித்துள்ளனர்.
தமது பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும் எனவும் தாதியர் சங்கங்கள் கோரியுள்ளன.
தமது பல்வேறு கொடுப்பனவு முறைகளும், மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவு முறைகளும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை உடனடியாக அரசாங்கம் திருத்தியமைக்க வேண்டும் என்றும் தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.