இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும்!

user 06-Mar-2025 இலங்கை 63 Views

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்காலத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் தமிழ் மக்களின் சம்மதத்தினை பெறவேண்டும் என்றால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் ஏனைய சர்வதேச நீதி கட்டமைப்புகளிலும் பாரப்படுத்தும்,புதிய தீர்மானம் அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 58 வது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் குறித்து இலங்கையில் உள்ள இணைஅனுசரணை நாடுகளின் தூதரகங்களிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது.

அந்த கடிதத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“2021 ஜனவரி 15ஆம்திகதியும் பெப்ரவரி 24ஆம் திகதியும் செப்டம்பர் 8 ம் திகதியும் 2022 பெப்ரவரி 25ஆம் திகதியும் கூட்டாக வெளியிட்ட கடிதங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே, தீர்மானத்தின் நகல்வடிவம் வெளியாவதற்கு முன்னரே நாங்கள் முன்னைய தீர்மானங்கள் குறித்து ஏமாற்றமடைந்துள்ளோம்.

அவை பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை, குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் என தெரிவித்திருந்தோம்.

இந்த விவகாரங்கள் தொடர்பான தீர்மானங்கள் பிரச்சினைக்குரியவையாக காணப்படுகின்றன,இவை அரசியல் சூழமைவை சரியாக இனம்காணதவறிவிட்டன,என தெரிவித்த நாங்கள் பின்வரும் விடயங்களை குறிப்பிட்டிருந்தோம்

அனைத்து முன்னைய தீர்மானங்களும் ஜெனீவாவில் பொறுப்புக்கூறலை தேக்கமடையச்செய்கின்றன.

மேலும் இவை இலங்கைக்கு காலஅவகாசத்தை வழங்குகின்றன. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையில் இரண்டு உறுப்பினர்களை கொண்டுள்ள இணை அணுசரனை நாடுகள், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாங்கள் கேட்டிருந்தோம்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு உதவும் வகையில் ஆதாரங்களை சேகரிப்பதற்கான சுயாதீனஅமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

இலங்கையில் தொடரும் வன்முறைகளை கண்காணித்துஅறிக்கையிடுவதற்காக விசேட அறிக்கையாளரை நியமிக்கும் வகையிலும்,வடக்குகிழக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகங்களை ஏற்படுத்தும் விதத்திலும் தீர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.” என்றுள்ளது.

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி