மட்டக்களப்பு , கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களையும் இணைந்து பணியாற்றுகின்ற ஆதரவாளர்களையும் ஓரம் கட்டுகின்ற செயற்பாடுகள் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை கிராம பொது அமைப்புக்கள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
“மேற்படி விடயம் தொடர்பாக எங்களுடைய கொக்கட்டிச்சோலை கிராமம் அன்று முதல் இன்று வரை தமிழர் தாயக கொள்கைகளை பின்பற்றி வருகிறது.
இதன்படி எமது கிராம அமைப்புக்கள் இலங்கை தமிழரசு கட்சியில் அணிதிரண்டு செயற்பட்டு வருவதை கடந்த காலங்களில் இடம் பெற்ற தேர்தல்களில் மூலமாக உணரக் கூடியதை தாங்களும் அறிவீர்கள்.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக எமது கிராமத்தையும் கிராமத்தில் இருக்கக் கூடிய இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களையும் இணைந்து பணியாற்றுகின்ற ஆதரவாளர்களையும் ஓரம் கட்டுகின்ற செயற்பாடுகளையிட்டு மனம் வருத்துகின்ற ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தளைப்பட்டுள்ளதை நாங்கள் உணருகின்றோம்.
உங்களுடைய மேலான கவனத்திற்கு அறியத்தருவதுடன் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறுமாக இருந்தால் தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியிலிருந்து எங்களுடைய கிராமமும், கிராமத்திலிருக்கக் கூடிய கட்சி உறுப்பினர்களும்,ஆதரவாளர்களும் விலகிச் செல்வதை விட வேறு வழியில்லை” என தெரிவித்துள்ளது.