அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சேர் டொன் பிராட்மன் 1947–48 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணிந்த பச்சை நிறத் தொப்பி அவுஸ்திரேலிய தினத்தன்று (ஜனவரி 26) ஏலத்திற்கு விடப்படவுள்ளது.
இந்த தொப்பியை பிராட்மன் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரங்கா சோஹோனிக்கு பரிசாக வழங்கினார். இது 75 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது குடும்பத்தில் உள்ளது.
இந்திய சுதந்திரம் பெற்று சில மாதங்களில் இடம்பெற்ற இந்த தொடர் இந்திய அணியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாகவும் அமைந்தது. இந்தத் தொடரில் பிராட்மன் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 715 ஒட்டங்களை எடுத்தார். அவர் 178.75 சராசரியுடன், 4 சதங்கள், ஒரு அரை சதம் மற்றும் ஒரு இரட்டை சதமும் பெற்றார்.
இந்நிலையில் இந்தத் தொடரில் பயன்படுத்திய பிராட்மனின் தொப்பி முதல் முறையாகவே ஏலத்தில் விடப்படவுள்ளது. ஏலத்தில் ஆரம்ப விலையாக ஒரு டொலர் நிர்ணயிக்கப்பட்டபோதும் அதிக விலை போக வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
1928 ஆம் ஆண்டு தனது முதல் பருவத்தில் பிராட்மேனின் முதல் பச்சை நிற தொப்பி 2020 ஆம் ஆண்டில் 450,000 டொலர்களுக்கு விற்கப்பட்டது என்று கிரிக்கெட் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஷேன் வோர்னின் பச்சை நிற தொப்பி 1 மில்லியன் டொலருக்கு அதிகமாக விற்கப்பட்டது.