தாயக கடற்றொழிலாளர்களின் கண்ணீருக்கு எப்போது தீர்வு கிடைக்கும் !

user 27-Feb-2025 கட்டுரைகள் 118 Views

கடந்த ஒரு சில நாட்களாகவே இந்திய நாடாளுமன்றத்திலும் இந்திய ஊடகங்களிலும்  இந்திய , இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினை பற்றிய விடயங்கள் பேசுபொருளாகக் காணப்படுகின்றன. அதேபோல் தமிழகத்தின் இராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில அரசியல் கட்சிகள் இந்திய கடற்றொழிலாளர்களுக்கு சார்பாகவும் எமது தாயக கடற்றொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்களை முன்னெடுத்து இருந்தனர்.

 

தமிழக அரசியல்வாதிகள் பலரும் இது தொடர்பாக தொடர்ந்தும்  குரல் கொடுத்தும் வருகின்றனர்.ஆனால் தாயகத்தின் நிலை அதற்கு எதிர் மாறாகவுள்ளது . இங்கு கடற்றொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கடற்றொழிலாளர் சங்கத்தினர் மட்டுமே குரல் கொடுத்து வருகின்றனர். ஏனைய தமிழ்  அரசியல் கட்சிகளோ தமிழ் அரசியல் தலைமைகளோ இதுவரை எமது ஈழத்து கடற்றொழிலாளர்கள் பற்றி எந்த ஒரு கருத்தினையும்  அவர்களுக்கு எதிரான இந்திய மீனவர்களின் செயற்பாடுகளுக்கோ எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை.

 

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய பிரவேசமும் மீன்களையும் பிற வளங்களையும் சூறையாடுவதனையும் அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவும் தமிழரசியல்  தலைமைகளது மௌனமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை என்ற கொடிய உண்மையை சொல்லித்தான் ஆக வேண்டும்.

 

இழுவை படகு மீன்பிடி என்பது கடலின் அடிவரை உள்ள அனைத்தையும் வாரி அள்ளி எடுப்பதாகும். இதை அடியோடு அள்ளுதல் என்று அழைப்பர். இதனையே இந்திய மீனவர் காலம் காலமாக கையாண்டு வருகின்றனர். இந்திய மத்திய அரசாங்கமும்  தமிழ்நாட்டு மாநில அரசாங்கமும் இந்திய இலங்கை மீனவர் முரண்பாட்டின் முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர் . இந்திய மத்திய அரசாங்கம் வருடத்திற்கு 60 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை கோருகிறது. வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையோ இழுவை படகுகளால் அவர்கள் அச்சுறுத்தப்படுவதையோ கவனிக்க இந்தியா மட்டுமல்ல எமது தாயக தமிழ் அரசியல்வாதிகளும் தயாராக இல்லை. அவர்களுக்கு இதற்கு நேரமும் இல்லை.

 

எமது தாயக மீனவர்கள் தங்களது அன்றாட வாழ்விற்காக அவலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்கள் விகாரை ஒன்றை இடிப்பதற்காக ஒன்று கூடி உள்ளனர். இங்கு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதினை விட கடற்றொழிலாளர் விவகாரங்களில் அவர்களுக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்தலாம் அல்லவா ? ஏன் வெளிப்படுத்தவில்லை ?  விகாரை ஒன்றை இடிப்பதற்கு ஒன்று கூடியவர்களால்  ஏன் எமது தாயக மீனவர்கள் அனுபவிக்கும் அவலங்களை நீக்குவதற்காக ஒன்று கூட முடியவில்லை?

எதற்காக ஒன்று திரண்டு போராட வேண்டுமோ அதுக்காக போராடவில்லை. ஆனால் தேவையற்ற இனவாதத்தை பரப்பக்கூடிய ஒன்றிற்காக இவர்கள் ஒன்றிணைந்து உள்ளார்கள். இங்கு இவர்களின் தேவை என்பது வெறும் அரசியல் மட்டுமே.மக்களாகிய நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது ஒன்றுதான் எமது அடிப்படைத் தேவை எது ? தற்போது வேண்டிய தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டிய விடயம் எது ? அதற்காக எமது தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுப்பட்டு உள்ளார்களா,  உதவுகின்றார்களா  என்பதை சற்று சிந்திக்க வேண்டும். சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கே அதற்கான விடை தெரியும் என நான் நம்புகின்றேன்.

Related Post

பிரபலமான செய்தி