கடந்தவாரம் இடம்பெற்ற புலம்பெயர் தமிழர் விழாவில் கலந்துகொண்ட தாயக அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழக முதலமைச்சருடன் இணைந்து புகைப்படம் (செல்பி) எடுப்பதில் கவனம் செலுத்திய அரசியல் தலைமைகள் தாயகம் பற்றியும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. தமிழக முதல்வரை சந்தித்தார்கள் , செல்பி எடுத்தார்கள் , தாயகத்திற்காக என்ன உரையாடினார்கள் ? தாயகத்திற்கும் தமிழகத்திற்கும் தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. அவை பற்றிய எந்த முன்வைப்பும் அவர்களிடம் இருக்கவில்லை.
முதலில் தாயக மீனவ உறவுகளின் பிரச்சினை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. தமிழ்நாட்டின் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை.40 வருடமாக அகதிகளாக இருப்பவர்களுக்கு இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமை இன்மையால் உயர் கல்வி கற்க முடியவில்லை.
அரச வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியவில்லை.வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கடவுச்சீட்டும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. வாழ முடியவில்லை என்று தாயகம் திரும்ப விரும்பினாலும் அதற்கும் அனுமதி இல்லை. இவற்றை குறித்து எமது தலைவர்களுக்கு அக்கறை இல்லை.
கடந்த வருடமும் தமிழக அரசின் புலம் பெயர் விழாவில் தாயகத்தின் முக்கியமான அரசியல் தலைமைகள் கலந்துக்கொண்டார்கள். இந்த முறையும் கலந்துக்கொண்டார்கள். இவர்கள் எதற்கு அங்கு செல்கிறார்கள்? தாயக பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளவா?
மேலும் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஈழத்தமிழருடன் நெருக்கமாகவும் ஆதரவாகவும் இருப்பதாக காட்டிக்கொள்ள காரணம் தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் வாக்குகளை கணிசமாகக் கைப்பற்றும் உள் நோக்கத்தில் மாத்திரமே ஆகும். இவர்கள் ஈழத்தமிழர் வாக்கு வங்கிகள் தங்களுக்கு தேவை என்பதை நன்கறிந்த அரசியல் கள்வர்களாவர்.
புலம்பெயர் தமிழர்களிடம் தாயகத்தின் அபிவிருத்திக்காக பேசியிருக்கலாம். கோரிக்கை முன் வைத்திருக்கலாம். தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டிருக்கலாம் . முன்வைக்க எத்தனையோ கோரிக்கைகள் இருந்தபோதும் அதையெல்லாம் விட்டுவிட்டு புகைப்படம் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டிய தமிழ் அரசியல் தலைமைகளை என்னவென்று சொல்வது ? இது தாயகத்தின் தீராத சாபம் .