மீண்டும் சூடுபிடிக்கும் கச்சத்தீவு விவகாரம் !

user 31-Dec-2024 கட்டுரைகள் 217 Views

கச்சத்தீவினை இலங்கையிடமிருந்து கூடிய விரைவில் மீட்போம் என தமிழக அரசு தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.அதே வேளையில் தமிழக அரசியல்வாதிகளும் இதற்காக தீவிரமாக  குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் இந்திய மத்திய அரசு தற்போது இதனைப் பற்றி தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. மீண்டும் இந்தியா கச்சத்தீவை மீட்டுக்கொள்ளும் எனில் எமது தாயக மீனவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

தமிழக அரசியல்வாதிகள் கச்சத்தீவு விவகாரத்தை தீவிரமாக கையாண்டு வருகின்ற அதே வேளையில் எமது தாயக தமிழ அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பாக சிறு வார்த்தை என்னும் பேசாமல் இருப்பது ஏனோ? ஏன் இதற்கெதிராக பேச இவர்களுக்கு வாய் திறப்பதில்லை அல்லது பேசினால்  இவர்களுக்கு அங்கிருந்து  கிடைக்கும் சலுகைகள் பறிபோகும் என்ற பயமா?

 

எத்தனையோ பயனற்ற விடயங்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் தாயக தமிழ் அரசியல் தலைமைகள் இன்று எமது தாயக மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன.? அத்தோடு தற்போது மக்கள் நலன் சார்ந்த விடயங்களை யோசிக்காமல்   தலைமைப் பொறுப்பிற்காக  சண்டையிட்டு   நீதிமன்றத்திற்கு அலைந்து  கொண்டிருக்கவே எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

ஏற்கனவே எமது கடல் எல்லையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக எமது மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் .எமது மீன் வளத்தை இழந்து தனது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் அல்லல் பட்டு வருகின்றனர். கச்சத்தீவு பறிப்போகும் எனில் எமது மீனவர்களின் வாழ்வு என்பது கேள்விக்குறியாகிவிடும்.

நாள்தோறும் ஊடகங்கள் வாயிலாக அத்தனை விடயங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன இருப்பினும் இது எதுவுமே தெரியாதது போல் தாயக அரசியல்வாதிகள் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கச்சத்தீவு விவகாரமும் சரி இந்தியமீனவர் கடல் எல்லை அத்துமீறல் விவகாரமும் சரி இந்த அளவுக்கு தீவிரமடைந்தமைக்கான காரணம் எமது தாயக தமிழ் அரசியல்வாதிகளின் இயலாமையே ஆகும்.

 

தமிழ் அரசியல் தலைமைகளே ! நினைவில் பதியுங்கள் உங்களை வாக்களித்து தேர்ந்தெடுத்தது எமது மக்கள் .நீங்கள் எமது மக்களுக்கு தான் விசுவாசத்தை காட்ட வேண்டுமே தவிர அதனை விடுத்து அந்நிய நாட்டவருக்கு உங்கள் விசுவாசத்தை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. தற்போது விவகாரம் தீவிரமாகியுள்ள நிலையில் எமது தமிழ் அரசியல் தலைமைகள் வாய்மூடி மௌனித்து இருக்கின்றார்கள் எனில் அவர்களால்  தாயகமும் தாயக மக்களும் அடைந்து கொள்ளக்கூடிய நன்மை தான் என்ன???

ஒன்றை உறுதியாக நினைவில் பதியுங்கள். எமது மக்கள் தொடர்ந்தும் நீங்கள் செய்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஏமாளிகளாக இருப்பார்கள் என நினைத்து விடாதீர்கள். மக்கள் சீற்றம் கொள்ள ஆரம்பித்தால் தென்னிலங்கையில் கடந்த கோட்டாபாய அரசாங்கத்தை துரத்தி அடித்தது போல் உங்களையும் துரத்தி அடிப்பார்கள் என்பது உறுதி. எனவே மக்களின் தேவைகளை அறிந்து சிந்தித்து செயலாற்றுங்கள்.

Related Post

பிரபலமான செய்தி