330 ஓட்டங்களுடன் அவுஸ்திரேலியா; இரண்டாம் நாள் ஆட்டம் இன்று!

user 30-Jan-2025 விளையாட்டு 144 Views

காலியில் நேற்று ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் மழையால் பாதிக்கப்பட்ட தொடக்க நாளில் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர்கள் இலங்கையினரின் பந்து வீச்சினை சாமர்த்தியமாக கையாண்டு 300 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்தனர்.

அவுஸ்திரேலியாவின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் ஆட்டமிழக்காது சதம் அடித்து முதல் இன்னிங்ஸின் முதல் நாளிலேயே 330 ஓட்டம் என்ற அபாரமான ஓட்ட எண்ணிக்கைக்கு களம் அமைத்தனர்.

ஆலன் போர்டர், ஸ்டீவ் வா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோரின் உயர் சாதனையுடன் இணைந்து, 10 ஆயிம் டெஸ்ட் ஓட்டங்களை கடந்த 15 ஆவது வீரர் மற்றும் நான்காவது அவுஸ்திரேலியர் என்ற சாதனைப் புத்தகத்தில் ஸ்மித் தனது பெயரை முதல் நாள் ஆட்டத்தில் பதிவு செய்தார்.

9,999 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆடுகளம் நுழைந்த அவர், பிரபாத் ஜெயசூர்யாவின் பந்து வீச்சில் ஒரு சிங்கிள் அடித்து இந்த மைல்கல்லை எட்டினார்.

இதையடுத்து தொடர்ந்தும் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 81.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களை பெற்றிருந்த போது போட்டியில் மழை குறிக்கிட்டது.

இதனுடன், முதல் ஆட்டமும் நிறைவுக்கு வந்தது.

இதன்போது, இடது கை தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 147 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 104 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இவர்கள் தவிர டிராவிஸ் ஹெட் 57 ஓட்டங்களையும், மார்னஸ் லாபுசாக்னே 20 ஓட்டங்களையும் நேற்றைய தினம் பெற்று ஆட்டமிழந்திருந்தனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் காலை 09.45 மணிக்கு ஆரம்பிக்கும்.

இதேவேளை, காலியின் வானிலையை பொருத்த மட்டில் இன்றும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

கிழக்கு, ஊவா, தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை இன்று பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

 

Related Post

பிரபலமான செய்தி