26/11 மும்பை தாக்குதல் குற்றவாளியை நாடு கடத்துவதற்கான மனு நிராகரிப்பு!

user 07-Mar-2025 இந்தியா 70 Views

மும்பை பயங்கரவாதத் தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதைத் தடை செய்யக் கோரிய விண்ணப்பத்தை அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணா, பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் என்பதால் அங்கு சித்திரவதை செய்யப்படுவார் என்று கூறி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இந்த வாரம் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி எலினா ககன், ராணாவை நாடு கடத்துவதற்கு தடை விதிக்க மறுத்ததுடன், அந்த விண்ணப்பத்தை நிராகரித்தார்.

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய நாட்டவரான 63 வயதான ராணா, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு பெருநகர தடுப்பு மையத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதி டேவிட் ஹெட்லியுடன் தொடர்புடையவர் என்று அறியப்படுகிறது.

இவர் 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல்களில் 175 பேர் கொல்லப்பட்டதற்கு முக்கிய சதிகாரர்களில் ஒருவராக இருந்தார்.

பெப்ரவரியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​இந்தியாவில் நீதியை எதிர்கொள்ள ராணாவை நாடு கடத்துவதற்கு தனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்தார்.

ஜனவரி மாதம் அமெரிக்க உயர் நீதிமன்றம் ராணாவின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பைத் தொடர்ந்து ட்ரம்பின் முடிவு, அவரை நாடு கடத்துவதற்கான வழியைத் தெளிவுபடுத்தியது.

2011 ஆம் ஆண்டில், மும்பையின் முக்கிய இடங்களில் நான்கு நாட்கள் நீடித்த தொடர்ச்சியான ஒருங்கிணைந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு செயல்படுத்தியதற்காக ராணா மற்றும் எட்டு பேர் மீது தேசிய புலனாய்வு நிறுவனம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அமெரிக்க ஜனாதிபதி நாடு கடத்தல் ஒப்புதலை அறிவித்த ஒரு நாளுக்குப் பின்னர், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மும்பையின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு ராணா உட்பட உயர்மட்ட குற்றவாளிகளைக் கையாளும் திறன் கொண்டது என்று வலியுறுத்தினார்.

Related Post

பிரபலமான செய்தி