வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் இஷோமார்ரா அகியோ கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை(11.02.2024) இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது, தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அபிவிருத்திப் பணிகளை வடக்கில் முன்னெடுப்பதற்கு சாதகமான சமிஞ்சை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த காலத்தில் ஜப்பானிய அரசாங்கம் ஜெய்க்கா திட்டத்தின் ஊடாக மேற்கொண்ட உதவிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
வடக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர் போக்குவரத்து வசதிகள், வீதிகள் அதற்குப் பிரதான சவாலாக இருப்பதாகவும் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயண நேரம் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட ஆளுநர் இது சுற்றுலாத்துறையை வடக்கில் மேம்படுத்துவதில் சில தடங்கல்களை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெறும் ஏனைய நாடுகளின், நிறுவனங்களின் உதவிகள் தொடர்பில் ஆளுநரிடம், உயர்ஸ்தானிகர் கேள்விகளை எழுப்பினார்.
இதனையடுத்து, ஜப்பான் தொடர்ந்தும் வடக்கு மக்களுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக ஆளுநர் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.