இன்று கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) விடுத்துள்ள சிறப்பு செய்தியில், சர்வதேச மகளிர் தினம் உண்மையிலேயே பெண்கள் உரிமைகளுக்கான இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கடந்த காலங்களில் மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்காக நம் நாட்டில் பல கலந்துரையாடல்களும் கருத்தாடல்களும் நடத்தப்பட்டிருந்தாலும், மேடைக்கு மாத்திரம் அந்த கலந்துரையாடல்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கட்டியெழுப்புவதில் இலங்கை பெண்களின் பங்களிப்பு மகத்தானது.
அந்த மகத்தான பணிக்காக ஒரு அரசாங்கமென்ற வகையில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே வேளை, கடந்த குறுகிய காலத்தில் இலங்கைப் பெண்களுக்கு பல வெற்றிகளை அடைய தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம் என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்நாட்டின் சனத்தொகையில் 51.7 வீதம் ஆக இருக்கும் பெண்களை தீவிரமாகவும் செயற்திறனுடனும் ஈடுபடுத்தும் திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம்.
இதற்கமைய, "சகல பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கும் சமத்துவம், உரிமைகள் மற்றும் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளின் கீழ்" நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள் " என இந்த ஆண்டு மகளிர் தினத்தை ஏற்பாடு செய்வதன் அர்த்தமுள்ள தன்மையை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.