மலையக மக்களின் தேவை குறித்து ஐ.நா அதிகாரியிடம் கோரிக்கை...

user 28-Jun-2025 இலங்கை 35 Views

மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால உரிமைகள், நிலமின்மை, பொருளாதார சார்பு மற்றும் நிர்வாக புறக்கணிப்பு போன்ற அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரிடம் நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் வோல்கர் டர்க்கினை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் சந்தித்து, மலையகத் தமிழர் சமூகத்தின் வரலாற்று பாரபட்சங்கள் மற்றும் தொடரும் சமூக, பொருளாதார புறக்கணிப்புகளை வலியுறுத்தியிருந்தார்.

இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் (TPA) சார்பில், அதன் சர்வதேச விவகாரங்களுக்கான உப தலைவர் பாரத் அருள்சாமி, உயர் ஆணையரை அவரது அதிகாரப்பூர்வ கலந்துரையாடலில் நேரில் சந்தித்து, ஒரு விரிவான உரிமைகள் அடிப்படையிலான அறிக்கையை கையளித்தார்.

இந்த அறிக்கை மலையக மக்களின் நில உரிமை, அடிப்படை வசதிகள், சுகாதார அணுகல், நிர்வாக பாகுபாடு மற்றும் சீர்திருத்த தேவைகளை வலியுறுத்துகிறது. 

குறித்த அறிக்கையில்,

நிலமின்மை மற்றும் உறையுளுக்கான அனுமதி மறுப்பு குடியிருப்புகள்

தலைமுறை தலைமுறையாகச் செயல்பட்டும் நில உரிமை மறுக்கப்படுகிறது. இது ICESCR பிரிவு 11 மற்றும் CERD பிரிவு 5(e)(iii) ஆகியவற்றை மீறுகிறது.

தொழிலாளர்கள் சார்பு ஊதியத்தில் சிக்கி மேலோங்க முடியாமல் இருக்கின்றனர். இது ILO மாநாடு எண். 110, ICESCR பிரிவு 7 மற்றும் SDG 8-ஐ மீறுகிறது.

மருத்துவ சேவைகளின் இடைஞ்சல்

தோட்ட மருத்துவ மையங்கள் அரசின் பேணல் இல்லாமையால் செயலிழந்துள்ளன. இது ICESCR பிரிவு 12 மற்றும் ILO தொழிலாளர் நல தரங்களை மீறுகிறது.

நிர்வாக பாகுபாடு

ஒரு கிராம சேவகர் அதிகாரி 3,000 பேர் மேல் பொறுப்பேற்கும் சூழல் காணப்படுகிறது, இது ICCPR பிரிவு 25(c)-இற்கு முரணாகும்.

“இது தொழிலாளர்களுக்கான கேள்வி மட்டுமல்ல – இது ஒரு கட்டமைப்பு அடிப்படையிலான மனித உரிமை கேள்வி” என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன. 

Related Post

பிரபலமான செய்தி