யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடல்

user 13-Nov-2025 இலங்கை 49 Views

தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர் மட்டக் கூட்டம் ஒன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மீன்வளம், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.

தேசிய நல்லிணக்கச் செயற்பாட்டின் பிரதானமாக கருதப்படும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை துரிதப்படுத்தும் நோக்குடனேயே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

எல்லை மறுசீரமைப்புகளை இறுதி செய்தல், இழப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துதல், விடுவிப்பதற்கான காணித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் நிர்வாக இடையூறுகளைத் தகர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்த பிற சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Related Post

பிரபலமான செய்தி