மணிப்பூரில் ஆயுதம் தாங்கிய குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்படும் மைதேயி இனத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 6 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஜிரிபாம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபகாலமாக மணிப்பூரில் மீண்டும் இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. ஜிரிபாம் மாவட்டத்தில் பழங்குடியின இளம்பெண் சமீபத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜிரிபாம் பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை தீ வைத்து எரித்து குகி இனத்தை சேர்ந்வர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜிரிபாம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படையினரின் முகாம் மீது குகி ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, மைதேயி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து 6 பேர் மாயமாகினர். மணிப்பூர் மாநில அரசில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்த லாயிஷ்ராம் ஹீரோஜித்தின் மனைவி, அவரது 2 குழந்தைகள், மாமியார், மனைவியின் சகோதரி உள்ளிட்ட 6 பேர் தான் மாயமாகி உள்ளனர் என தெரியவந்தது.