வவுனியாவில் 14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி !

user 19-Mar-2025 இலங்கை 71 Views

14 இளைஞர்களுடன் களமிறங்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னனி வவுனியா வடக்கில் தமிழ் தேசியம் சார்ந்து தூய அரசியலுடன் ஆட்சி அமைக்கும் என கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.

வவுனியா(Vavuniya) வடக்கு பிரதேச சபையின் வேட்பு மனுவை இன்று (18) தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

''நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுனியா மாவட்டத்தின் மாநகர சபை உட்பட 4 சபைகளில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது.

வவுனியா வடக்கு உள்ளுராட்சி சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளோம். நான்கு சபைகளிலும் கடுமையான நெருக்கடியின் பால் இந்த தேர்தலை எதிர் கொண்டாலும், நிச்சயமாக தமிழ் தேசிய பரப்பில் உரிமைக்காக நேர்மையாக அரசியல் செய்கின்ற ஒரு தரப்பு என்ற அடிப்படையில் கணிசமான வெற்றிகளைப் பெறுவோம்.

வவுனியா வடக்கைப் பொறுத்தவரை நிலப்பரப்பு திட்டமிட்ட ரீதியில் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. இம்முறை சிறந்த வேட்பாளர்களை அதிலும் இளைஞர்களை அதிமாக உள்வாங்கி நிறுத்தியுள்ளோம்.14 இளைஞர்களை களமிறக்கியுள்ளோம்.

அவர்களுடன் கடந்த முறை உள்ளுராட்சி மன்றத்தில் இருந்தவர்கள், அனுபவம் வாய்ந்தவர்கள், உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்க கூடியவர்களை களம் இறக்கியுள்ளோம்.

வவுனியா வடக்கைப் பொறுத்தவரை மத வழிபாடு தடுக்கப்படல், நில ஆக்கிரமிப்பு இடம்பெறும் பகுதியாக இருக்கிறது. தூய்மையாக அரசியல் பேசும் ஒரு தரப்பு என்ற அடைப்படையில் இம்முறை நாம் ஆட்சி அமைப்போம்.

தூய்மையான, நேர்மையான தமிழ் தேசியம் நிறைந்த பிரதேச சபை ஒன்று உருவாக வேண்டும் என்ற அவா உள்ளது. அதனை மக்கள் நிறைவேற்றுவார்கள்.

அதன் மூலம் உள்ளுராட்சி மன்றங்களால் ஆற்றக் கூடிய பணிகளை தமிழ் தேசிய நோக்கோடு செயற்படுத்துவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

பிரபலமான செய்தி