தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட வரைவு மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வார இறுதியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை மன்னாரில் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங்காலங்களிலேனும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அதன்படி தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.