ஈழத் தமிழர்களுடைய வரலாறும், தொன்மை மிகு பண்பாடும், அவர்கள் வாழும் தாயக நிலப்பரப்பின் கேந்திர அமைவிடமும் தோற்கடிக்கப்பட முடியாத பலமான இருப்பியலை கொண்டுள்ளது.
ஆயினும் ஈழத் தமிழர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றனர். ஈழத் தமிழர்களின் பிரச்சனை என்பது இலங்கை தீவுக்குள்ளோ, இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு உள்ளோயோ, அல்லது சிங்கள தலைவருடன் பேரம் பேசியோ தீர்க்கப்பட முடியாது.
இலங்கை தீவின் தேசிய இனப்பிரச்சனை என்பது இந்திய உபகண்டம் சார்ந்த பிரச்சனையாகவும், இந்தோ-பசுபிக் பிராந்தியம் சார்ந்த பிரச்சனையாகவும், சர்வதேசங்கள் தொடர்புபட்ட பிரச்சனையாகவும், உலகம் தழுவிய ஆளுகை போட்டியின் கேந்திர ஸ்தானத்தில் செல்வாக்கு செலுத்தும் பிரச்சனையாகவும் இருப்பதனால் சர்வதேச நாடுகளின் தலையிடுகளுக்கு கூடாகவே தீர்க்கப்படக் கூடியது ஒன்று.
அவ்வாறில்லாமல் இப்பிரச்சனை ஒருபோதும் யாராலும் தீர்க்கப்பட முடியாதது. அப்படியானால் ஈழத் தமிழர்கள் தங்களுடைய தேசிய அபிலாசைகளை அடைவதற்கு இனி என்ன செய்ய வேண்டும்? அதை எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? அது எவ்வாறு ஆரம்பிக்கப்பட வேண்டும்? என்பது இங்கே முக்கியமானது.
இந்த அடிப்படைக் கேள்விக்கான திறவுகோலை தேடியே இந்தப் பத்தி பயணிக்கிறது. ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்கான பயணத்தில் ஒரு அரை அரசை கட்டி அதற்கான அணைத்து அரச கட்டுமானங்களையும் நிர்மாணம் செய்த நிலையில் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பெருந்தோல்வி அனைத்து அரசகட்டுமானங்களையும் சிதைத்தது மாத்திரம் அல்ல தமிழ் தேசிய சிந்தனைக்கும், தமிழ் தேசிய கருத்தியல் மண்டலத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கிவிட்டது.