ஊழலற்ற ஆட்சியை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் !

user 06-Dec-2024 இலங்கை 835 Views

குடியரசுத் தலைவர் கூறியவாறு ஊழல், இனவாதம், மதவாதம் அற்ற, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆட்சியை சொல்லில் மாத்திரமின்றி அரசாங்கம் செயலிலும் காட்ட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (Shanmugam Kugadasan) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "குடியரசுத் தலைவர் தனது உரையில் அரச சேவையினை வினைத்திறன் உள்ளதாக ஆக்கப் போவதாகவும் சட்ட ஆட்சியை நிலைநாட்டப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவையினை உலகத்தரத்திற்கு உயர்த்தினால் தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.   இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 139 குடிமக்களுக்கு ஓர் அரச ஊழியர் இருந்தார். 

இன்று 13 பேருக்கு ஓர் அரசு ஊழியர் காணப்படுகின்றார் என கூறப்படுகின்றது. எனவே தான் அரச சேவையினை ஒழுங்குபடுத்தி மீளமைக்க வேண்டும்.

அடுத்து அவர் பேசுகையில் பொதுச் சொத்துக்களை களவாடியவர்களை, மோசடி செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் வந்த அரசுகளும் தேர்தல் காலங்களில் இவ்வாறு கூறின, ஆட்சிக்கு வந்த பின்பு எதுவும் நடக்கவில்லை, யாரும் தண்டிக்கப்படவும் இல்லை, ஆனால் இந்த அரசு கூறியதனை கூறியவாறு செய்யும் என நம்புகின்றேன்.

அத்தோடு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவது மாத்திரம் அன்றி அவர்கள் மோசடி செய்ததாக கூறப்படும் பணத்தினையும் வளத்தினையும் மீளப் பெற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

Related Post

பிரபலமான செய்தி