பிரித்தானிய பெண்ணின் நிதி அட்டையைக் கொள்ளையடித்த சந்தேக நபர் கைது! !

user 21-Jan-2025 இலங்கை 190 Views

பிரித்தானிய பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்தபோதே  குறித்த சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

கண்டியிலிருந்து எல்ல நோக்கி பயணித்த ரயிலில் பயணித்திருந்த குறித்த பிரித்தானிய பெண்ணின் நிதி அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து சந்தேக நபர் களவாடியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து சந்தேக நபர் ஹட்டன் நகருக்கு சென்று அங்கு தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசி, ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த நிலையில் தனது நிதி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் களவாடப்பட்ட நிதி அட்டையில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர். மேலும் சந்தேக நபரால் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் மீள வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி