15 மாதங்களுக்கு பின்னர் காசாவுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள்!

user 28-Jan-2025 சர்வதேசம் 91 Views

பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த இஸ்ரேல் – ஹமாஸ் போரானது  15 மாதங்களுக்கு பின்னர் தற்போது  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அந்தவகையில்  முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் ஒப்பந்தப்படி பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

இதனால் ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் இடம்பெயர்ந்த 6.5 லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ” பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும் வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்திருந்தது. அதன்பின்னர் நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு கட்டமாக அர்பெல் யஹூட் உட்பட 6 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்ய முடிவு எட்டப்பட்டது.

இந்நிலையில் வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதியளித்தது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில், பாலஸ்தீனியர்கள் நெட்சாரிம் பாதை வழியாக கால்நடையாக கடக்க அனுமதிக்கப்பட்டனர். இது போரின் ஆரம்பத்தில் இஸ்ரேல் உருவாக்கிய இராணுவ மண்டலமாகும். இந்த பாதை வழியாக காசாவின் வடக்கு பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் திரும்பியுள்ளனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான வீதி முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

பிரபலமான செய்தி