ஐபோன் மோகத்தில் ஆரம்பித்த விபரீதம் காதலுக்காக எல்லை தாண்டிய இளம்பெண்

user 10-Jan-2026 இந்தியா 25 Views

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், ஐபோன் கைபேசி வாங்குவதற்காக தனது அத்தையின் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளைத் திருடி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 6ஆம் திகதி, சுஷ்மா நிகுஞ்ச் என்பவர், தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த 15 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம், தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் திருடப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில், அவரது சகோதரியின் மகள் மினல் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மினல் மற்றும் அவரது காதலன் அனில் பிரதான் ஆகியோர் தலைமறைவாகியிருந்த நிலையில், நவீன தொழில்நுட்ப உதவிகளின் மூலம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முதலில் ஐபோன் வாங்கும் நோக்கில் அத்தையின் வீட்டில் இருந்து 2 இலட்சம் ரூபாயையும், பின்னர் மேலும் 3 இலட்சம் ரூபாயையும் திருடியதாக மினல் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஐபோன் வாங்கிய பின்னர், இந்த ஜோடி ராய்ப்பூர் மற்றும் பிலாய் ஆகிய நகரங்களுக்கு சென்று, அங்குள்ள விலையுயர்ந்த விடுதிகளில் தங்கி, மதுபானம் மற்றும் களியாட்டங்களுக்காக சுமார் 5 இலட்சம் ரூபாய் வரை செலவிட்டுள்ளனர்.

அதன் பின்னர் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா பகுதிக்குச் சென்ற அவர்கள், திருடிய தங்கக் கட்டிகளை விற்றுள்ளனர்.

அந்தப் பணத்தை பயன்படுத்தி, ‘ஹாரியர்’ (Harrier) ரக சொகுசு சிற்றூந்து ஒன்றை முழுப் பணத்தையும் செலுத்தி வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 51,82,300 ரூபாய் பெறுமதியான பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாக உள்ள ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Post

பிரபலமான செய்தி