ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து, உக்ரைனுக்கான பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இன்று அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு காணொளி பதிவினையிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிகளை சந்தித்து ஜெலென்ஸ்கி லண்டனில் கலந்துரையாடியிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள காணொளியில், "அடிப்படை சூழ்நிலை என்னவென்றால், இந்தப் போரை நியாயமான முறையில் அமைதியுடன் விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, நிலைகளைப் பேணுவதும், சரியான இராஜதந்திரத்திற்கான நிலைமைகளை உருவாக்குவதும் ஆகும்.
நமக்கு அமைதி தேவை, உண்மையான மற்றும் நேர்மையான அமைதி, முடிவில்லாத போர் அல்ல. மேலும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் அவசியம். 11 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாதது, கிரிமியாவின் ஆக்கிரமிப்பையும் டான்பாஸில் நடந்த போரையும் ரஷ்யா தொடங்க அனுமதித்தது.
பின்னர், பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாதது ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்க காரணமாகியுள்ளது, இப்போது, தெளிவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாததால், ரஷ்யா இந்தப் போரை தொடர்ந்து தூண்டிவிடுகிறது.
இந்நிலையில், உலகம் இதை அவதானித்து கொண்டு தான் உள்ளது. இன்று, ஐரோப்பிய கூட்டாளிகளுடன் சேர்ந்து, அமைதிக்கு நம்மை நெருக்கமாகக் கொண்டுவரக்கூடிய ஒரு சிறப்பு இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பில் எங்கள் பணியைத் தொடர்ந்தோம்” என குறிப்பிட்டுள்ளார்.