சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டங்கள் இன்றையதினம் (10) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் இலங்கை அரசிடம் நீதி கோரியபோதும், தீர்வுகள் கிடைக்காத நிலையில் தற்போது சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பொதுசன நூலக முன்றலில் குறித்த போராட்டமானது காலை பத்து முப்பது மணி அளவில் இடம்பெற்றது.
இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள், சிவில் அமைப்பினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போராட்டத்தை மேற்கொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் போது வலிந்து காணாமல் போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத் தா போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தை மேற்கொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று (10) கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் ஒன்று கூடினர்.