ராஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை (26) முடிவடைந்த 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பதக்கப் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
அதேநேரம், மூன்று நாள் நடைபெற்ற இப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
போட்டியை நடத்தும் அணியான இந்தியா, 20 தங்கம், 20 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் உட்பட மொத்தம் 58 பதக்கங்களை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
இலங்கை 16 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 40 பதக்கங்களை வென்றது.
போட்டியின் இறுதி நாளான நேற்று இலங்கை எட்டு தங்கப் பதக்கங்களை வென்றது.
பதக்கப் பட்டியலில் நேபாளம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பங்காளதேஷ் மற்றும் மாலத்தீவுகள் தலா ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றன.
பூட்டான் பதக்கம் எதுவும் இல்லாமல் போட்டியை முடித்தது.
போட்டியின் இறுதி நாளில் பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், பெண்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் ஆண்களுக்கான 4×400 மீட்டர் ரிலே உள்ளிட்ட போட்டிகளில் இலங்கை வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது.
தெற்காசிய தடகளப் போட்டியின் நான்காவது சீசனில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவுகள் என ஆறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 விளையாட்டு வீரர்கள் 37 போட்டிகளில் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.