கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2022- ல் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் செந்தில் பாலாஜி அண்மையில் ஜாமீனில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். மீண்டும் அமைச்சரானார்.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல் மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாருமான எம்சிஎஸ்.சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 5 கார்களில் சுமார் 20 பேர் வந்து சோதனை நடத்தி வருகின்றனர்.