அரசியல்மயப்படுத்தப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டம்!

user 09-Dec-2024 கட்டுரைகள் 464 Views

யுத்தம்  மௌனித்து ஒரு சில வருடங்களுக்கு பிறகு   யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தரும்படி  வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு இன்று அதே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றதா? ஆத்மார்த்தமாக உண்மையாக பங்கேற்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றதா?  பலரும் அதை இல்லை என்றே கூறுகின்றனர். ஏனெனில் தற்போது நடக்கும் ஒரு சில சம்பவங்கள் அதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.

 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பானது தற்போது முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. ஏனெனில் தாயகத்தின் ஏதாவது ஒரு முக்கியமான ஒரு நிகழ்வு இடம்பெற இருப்பின் அல்லது தாயகத்தில் ஏதாவதொரு பிரச்சினை நடைபெறும்போதும் சரி அவற்றை திசை திருப்பும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்கள் முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

 

அண்மையில் ஏற்பட்ட தொடர் மழையில் வெள்ளத்தினால் தாயகம் பாதிக்கப்பட்டிருந்தபோது கூட இவர்கள் ஒரு பக்கமாக காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இருப்பதற்கு இடமின்றி உண்ண உணவின்றி பாதுகாப்பின்றி பலர் உயிரை இழந்து உறவுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் ஒரு பக்கமாக போராட்டத்தினை முன்னெடுத்து இருந்ததமையானது அவ்வளவு பொருந்தக்கூடியதாக  தெரியவில்லை.

 

 

 ஏனெனில் இவர்களின் பின்னணியில் இவர்களை இயக்குபவர்கள் அரசியல்வாதிகளே. பிரச்சினை  சமயங்களில் அரசியல்வாதிகள் மீது மக்களின் கவனம் திரும்பும் என்பதனால் தாங்கள் தப்பித்துக் கொள்ள இந்த காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர் மறுக்க முடியாத உண்மை.ஆரம்பத்தில் ஆத்மார்த்தமாக இயங்கிய எமது அந்த அமைப்பானது தற்போது அரசியல்வாதிகளின்  பிடியில் சிக்கி தவிக்கின்றது. தேவைக்கேற்ப இந்த அமைப்பினை பயன்படுத்தி வருகின்றனர்.

 

 இவ்வாறு நடந்து கொள்வது உண்மையில் உறவுகளை உண்மையில் தொலைத்தவர்களின் உணர்வுகளை அவமரியாதை செய்யும் செயற்பாடாகும்.  உண்மையில் உறவுகளுக்காகப் போராடுபவர்களாக இருந்திருந்தால் எட்டு மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்புகளும் கடந்தக் காலங்களில் பதவிக்காக வீதியில் இறங்கி சண்டைப் பிடித்திருக்கமாட்டார்கள். உண்மையான  உணர்வோடு இருப்பவர்களுக்கு பதவி என்பது தேவையில்லை.

 

 எனவே சற்று சிந்தித்து செயற் பட வேண்டும்.போரில் எத்தனையோ உறவுகளை தொலைத்திருக்கின்றோம். இதனை பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்பவர்களை நாம் நிராகரிக்க வேண்டும். எமது பக்கம் நியாயம் இருப்பின் நிச்சயமாக அதற்கான தீர்வொன்று கிட்டும். அரசியல்வாதிகளின் சுயநல பிடியில் சிக்கி  போலியானப் போராட்டங்களை முன்னெடுத்து போரில் உண்மையாகவே உறவுகளை தொலைத்தவர்களை கொச்சைப்படுத்தாதீர்கள் அதுவே எமது வேண்டுகோள்.

Related Post

பிரபலமான செய்தி