தாயக அரசியல் வரலாற்றில் அடுத்ததாக ஒரு அரசியல் நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்கு தாயக அரசியல் தலைமைகள் ஒத்திகை கொண்டிருக்கின்றார்கள். தாயகத்தின் பிரதான மூன்று கட்சிகள் இணைந்து ஒரே கூட்டமைப்பாக தாயக அரசியலை முன்னெடுக்க ஆயத்தமாகி வருகின்றன. அதற்கான பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே இருந்த பல கட்சிகள் இன்று சுக்கு நூறாக சிதறிப் போய் உள்ள நிலையில் கூட்டமைப்புகள் ஆளுக்கு ஒரு பக்கம் உடைந்து போன நிலையில் தற்போது இவர்களது இந்த முயற்சி முற்றிலும் அரசியல் கபட நாடகமே என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாயக மக்களிடத்தில் நம்பிக்கை இழந்துள்ள தமிழரசியல்வாதிகள் தலைமைகள் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பிரதிபலிப்புதான் இந்த அரசியல் முக்கோணத் தொடரின் ஆரம்பம்.
எதிர்வரும் 25ஆம் திகதி அதற்கான ஒன்று கூடல் ஒன்று இடம்பெற உள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் கசிந்துள்ளன.
ஏற்கனவே அவர்கள் செய்த அனைத்திற்கும் மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்கி அரசியலில் இருந்து அவர்களை முற்றிலுமாக ஒதுக்கி விட்டார்கள் ஏதோ ஒரு சில புல்லுருவிகள் மட்டும் நாடாளுமன்றம் சென்று இருப்பினும் அது முழுமையாக தாயகம் மக்களின் வெளிபாடு என்று கூற முடியாது. ஏனெனில் தாயக மக்கள் எமது தமிழ் அரசியல்வாதிகளின் ஊழல்களையும் அவர்களது அரசியல் நாடகங்களையும் பார்த்து பார்த்து சலித்து போய் உள்ளனர். மேலும் இவர்களின் அரசியல் நாடகதாரிகளின் முன்னெடுப்புகள் வெறும் சுயநலப் போக்கில் என்பதையும் மக்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர்.
தாயக கடற்றொழிலாளர்களின் பிரச்சினை இன்றளவும் தீர்க்கப்படவில்லை அதுபோல தாயகத்தின் நிலவும் திண்மக் கழிவகற்றல் பிரச்சனைகளும் இன்றும் தீர்க்கப்படவில்லை. தாயகத்தின் பாதி நகரங்கள் குப்பை கூழங்களாக மாறி துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றன.இவ்வாறு இருப்பின் தாயகத்தை நோக்கி எவ்வாறு சுற்றுலா பயணிகள் வருவார்கள்? மறுபக்கம் மேய்ச்சல் நிலங்களுக்கான போராட்டம், குடிநீருக்கான போராட்டம் ,காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், காணி மீட்புப் போராட்டம் என நாளாந்தம் மக்கள் தங்கள் வாழ்க்கையைப் போராட்டங்களில் தொலைத்து வருகின்றனர்.
ஆனால் இத்தனை காலமும் இவை எவற்றுக்கும் தீர்வு காண முடியாத தாயக அரசியல் தலைமைகள் புதிய கூட்டணியில் எதை சாதிக்க போகின்றார்கள் ? இதுவும் அரசியல் கண்துடைப்பே.. இவர்களின் சுயநல அரசியலுக்கு மக்கள் விரைவில் முடிவுக்கட்டுவார்கள் என்பது மட்டும் இப்போதே உறுதியாகியுள்ளது.