மீண்டும் ஒரு அரசியல் நாடகமா ??

user 19-Dec-2024 கட்டுரைகள் 367 Views

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு முன்மொழிவின் அடிப்படையில் ஏனைய கட்சிகளோடு இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக பிரபல தமிழ் அரசியல் கட்சியொன்று அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளின் பின்னணியில் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது அண்மையில் தாயகத்தில் பிரதான இரு கட்சிகளான தமிழ் தேசிய முன்னணி மற்றும் தமிழரசு கட்சிகளுக்கு இடையே  இதற்கான கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

 

இது தமிழ் மக்களை ஒரு இன ஐக்கியத்துக்குள் கட்டி எழுப்புவதற்கான முயற்சி என்று கூறப்பட்டாலும் எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சியானது பொது வேட்பாளருக்கு ஆதரவளித்த வேளையில் அது இந்தியாவின் சூழ்ச்சி என்றும் தமிழ் தேசிய முன்னணி வர்ணித்திருந்தது. அதேபோல் தேர்தலையும் புறக்கணித்தது.

 

இப்பொழுது மேற்படி கட்சிகள் பேரவையின் முன்மொழிவின் கீழ் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்திருப்பது மற்றும் ஒரு அரசியல் கபட நாடகமாகவே தோன்றுகின்றது. கடந்த 15 ஆண்டுகளில் தமிழின  ஐக்கிய முயற்சிகளுக்கு பெரும்பாலும் ஆதரவை வழங்காத ஒரு கட்சி திடீரென இவ்வாறு அழைப்பு விடுத்திருப்பது தமிழ் தேசிய அரசியலில் வேடிக்கையாக உள்ளது. குறைந்தபட்சம் சிவில் அமைப்புகள் தமிழின ஐக்கியத்திற்காக  எடுத்த சிறியளவு முயற்சிகளை கூட இப்பிரதான கட்சிகள் செய்திருக்கின்றனவா ? என ஆராய்ந்துப் பார்த்தால் இல்லை என்றே கூறலாம்.

 

தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் இதுவும் அடுத்த  கட்ட  அரசியல் காய் நகர்த்தலேயாகும்.  காரணம் இல்லாமல் காய் நகர்த்த மாட்டார்கள் எமது தமிழ் அரசியல் தலைமைகள். இவர்களின் சுயநல அரசியலுக்காக மக்களை எந்தவிதத்திலும் பகடைக்காய்களாக பயன்படுத்த சிறிதும் அஞ்சாதவர்கள்.

 

தமிழர் ஒற்றுமை எனும் ஒற்றை வார்த்தைக்குள்  தமிழ் மக்களை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என எண்ணுகின்றனர். உண்மையில் இது ஒரு கானல் நீராகும். தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் ஒரு பகல் கனவைக் கண்டு கொண்டிருக்கிறார்கள் . இதனை தமிழ் மக்களாகிய நாங்கள் தவிடுபொடியாக்க வேண்டும். ஊழல் பேர் வழிகளும் மோசடிகாரர்களும் எமக்கான தலைமைகள் அல்ல என்பதை உணர்ந்து செயற்படவேண்டும். இவர்களால் நாம் இதுவரை இழந்தவை போதும்.எதிர்கால தாயகமாவது புதிய விடியலை நோக்கி பயணிக்கட்டும்.

Related Post

பிரபலமான செய்தி