மன்னாரில் கனிய மணல் அகழ்வினை எதிர்த்து போராட தடை !

user 18-Feb-2025 இலங்கை 140 Views

மன்னாரில் கனிய மணல் அகழ்வினை எதிர்த்து மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெறலாம் என்ற அடிப்படையில், அதற்கு எதிரான தடை உத்தரவை மன்னார் நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக அரச திணைக்கள அதிகாரிகள் இரு முறை மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.

இரு முறையும் மக்களின் ஒன்றினைந்த எதிர்ப்பால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவ்வாறான நிலையில், மீண்டும் குறித்த அரச திணைக்களங்கள் மற்றும் ஒரியன் மினரல் நிறுவனம் ஆய்வுக்காக மன்னார் ஓலைத்தொடுவாய் மற்றும் தோட்டவெளி பகுதிக்கு வருகை தர உள்ள நிலையில், பொதுமக்கள் அணி திரண்டு போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், போராட்டக்காரர்கள் என அடையாளப்படுத்தி சிலரின் பெயர்களை குறிப்பிட்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் பொலிஸார் தடையுத்தரவை பெற்றுள்ளனர்.

குறித்த தடை உத்தரவானது சட்டத்தரணி செல்வராஜ் டினேசன், அருட்தந்தை மார்கஸ் அடிகளார் உள்ளடங்களாக 10 பேருக்கு எதிராக பெறப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவின் கீழ் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும்.

எந்த பொது சொத்துக்களுக்கும் தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்த கூடாது.

மிக முக்கியமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் ஒரியன் மினரல் நிறுவனத்தின் செயற்பாட்டுக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

 

Related Post

பிரபலமான செய்தி