கடவுச்சீட்டு பற்றாக்குறையால் வெளிநாட்டு தொழில் துறை முடங்கும் அபாயம்!

user 05-Jan-2025 இலங்கை 122 Views

தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுக்களுக்கு மேலதிகமாக, புதிய கடவுச்சீட்டுக்களுக்கான கட்டளைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி தொழிலாளர் இடம்பெயர்வை முடக்கும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரித்துள்ளது.

கொரிய மொழி புலமைத் தேர்வில் பங்கேற்க விரும்பும் வேட்பாளர்கள், தேர்வில் தேர்ச்சி பெற கடவுச்சீட்டு எண்களை வழங்க வேண்டும் என்பதால், எதிர்வரும் வாரங்களில் கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகை புலம்பெயர்ந்தோரின் தேவையை பூர்த்தி செய்ய சுமார் 30,000 பயண ஆவணங்கள் வழக்கமாக தேவைப்படுகின்றன.

இலங்கை தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் நிறைவேற்றத் தவறினால், விரைவில் இலங்கை தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்கள் ஏனைய நாடுகளை நோக்கி திரும்பும் என்றும் பணியகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு பதிவுசெய்யப்பட்ட 312,000 புலம்பெயர்ந்தோரை விட இந்த ஆண்டு சுமார் 340,000 தொழிலாளர்களை அனுப்புவதே தமது இலக்காகும் என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

தினசரி வழங்கல் விகிதத்தைப் பொறுத்து, தற்போதுள்ள 750,000 கடவுச்சீட்டுக்கள், இந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் தீர்ந்துவிடும்.

இது தொடர்பில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் மத்தியில் கூட்டம் ஒன்று அண்மையில நடைபெற்றது. இருப்பினும், உறுதியான தீர்வு எதுவும் எடுக்கப்படவில்லை.

ஏற்கனவே வெற்றுக்கடவுச்சீட்டுக்களை வழங்கி வந்த தேல்ஸ் டிஐஎஸ் பின்லாந்து மற்றும் அதன் இலங்கை நிறுவனமான ஜஸ்ட் இன் டைம் டெக்னாலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

Related Post

பிரபலமான செய்தி