மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடந்தவாரம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் மற்றும் ஏனைய குற்றச் சம்பவங்களுக்கு எதிராக நேற்றைய தினம் அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்பிரதேச மக்களுக்கு தங்களின் உயிர் பாதுகாப்பு பற்றிய பயம் வந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
யாழ் உள்ளிட்ட வடக்கிழக்கின் பல்வேறு இடங்களில் இவ்வாள்வெட்டு குழுக்கள் சுதந்திரமாக தலைத் தூக்கி நடமாடுகின்றன. ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும், ஒரு சில பணக்கார புள்ளிகளும் தங்களின் தனிப்பட்ட தேவைகள், பழிவாங்கல்கள் என்பவற்றிற்கு இச்சட்டவிரோத கும்பல்களை பயன்படுத்திக் கொள்வதாக தெரிய வந்துள்ளது. இவ்வாள்வெட்டு குழுக்களுக்கு பின்னால் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இதனைப் பற்றி யோசிப்பதில்லையா , இவை சமூகத்திலுள்ள மக்களுக்கு எவ்வளவு அச்சுறுத்தலாக அமையும் என்பதை ஒரு கணமேனும் சிந்திக்கவில்லையா ? தாயகத்தை பாதுகாப்பற்ற இடமாக மாற்றிக் கொண்டிருப்பது அங்கிருக்கும் ஒரு சில தமிழ் அரசியல்வாதிகளும் ஒரு சில பண முதலைகளுமேயாகும்.
இவர்களை துணையாக வைத்துக் கொண்டு போதைப்பொருள் வியாபாரம், சட்டவிரோத கனிய மணல் அகழ்வு போன்ற நாசகர செயற்பாடுகளை செய்துக் கொண்டு அதற்கு எதிராக செயற்படுபவர்களையும் குரல் கொடுப்பவர்களையும் இச்சட்டவிரோத கும்பல்களையும் வைத்து அறவே இல்லாமல் செய்வதும் காலங்காலமாக தொடர்ந்து வருகிறது.
கடந்த காலங்களிலும் இவ்வாள்வெட்டு குழுக்களோடு தொடர்புள்ளதாக ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளின் பெயர்கள் ஊடகங்களில் அடிப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழ் அரசியல்வாதிகளுக்கு எமது மக்களை எப்பொழுதும் பதற்றமான சூழல் ஒன்றில் வைத்துக் கொள்ளவே விரும்புகின்றனர். அப்போதே அவர்கள் அரசியல் செய்யமுடியும்.
இதனாலேயே மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பொறுமையிழந்து வீதிக்கு இறங்கியுள்ளனர். உண்மையில் இந்த வாள்வெட்டுக் குழுக்கள் யார் ? இவர்கள் பின்னணியில் இயங்குவது யார் என்பதை கூடிய சீக்கிரம் வெளிக்கொணர வேண்டும் . அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழஙகப்பட வேண்டும் . இல்லையெனில் இது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மை.