இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிரான பாதுகாப்பு விதிமீறல் தொடர்பில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அமர்ந்திருந்த காரை நோக்கி ஒருவர் வேகமாகச் சென்ற சம்பவத்துக்கு எதிராகவே இவ்வாறு கண்டனம் வலுத்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பிரித்தானிய பயணத்தின் போது நடந்த பாதுகாப்பு விதிமீறல் சம்பவத்தை கண்டித்த இந்தியா "ஜனநாயக சுதந்திரத்தை இதுபோன்ற நபர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர்" என்று கூறியுள்ளது.
எக்ஸ் தளத்தில் பரவும் காணொளிகளில் மூவர்ணக் கொடியுடன் ஒரு நபர் ஜெய்சங்கர் அமர்ந்திருக்கும் காரை நோக்கி விரைவதை காட்டுகிறது.
அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் அந்த நபரைத் தடுத்து அழைத்துச் சென்றபோதும் காலிஸ்தான் ஆதரவுக் கொடிகளுடன் போராட்டக்காரர்கள் குழு கோஷங்களை எழுப்பியாதா தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து இந்தியவெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்
"வெளியுறவுத்துறை அமைச்சர் பிரித்தானியாவுக்கு சென்ற போது பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்ட காட்சிகளை நாங்கள் பார்த்தோம்.
இந்த பிரிவினைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று கூறினார்.
மேலும் "இப்படிப்பட்டவர்கள் ஜனநாயக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை நாங்கள் கண்டிக்கிறோம்.
இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தும் அரசு தங்கள் அனைத்து கடமைகளை முழுமையாக நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றும் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.