போர் நிறுத்த எதிரொலி : ரஷ்யா - உக்ரைன் பிணைக் கைதிகள் விடுவிப்பு !

user 20-Mar-2025 சர்வதேசம் 96 Views

ரஷ்யா (Russia) - உக்ரைன் (Ukraine) இடையே போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்ட நிலையில், இருநாடுகளில் சிறைபிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப் பேற்ற டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதற்காக, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இருப்பினும், போர் நிறுத்தத்திற்கு தயார் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் அந்நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சில், இரு நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் தாக்காமல் இருப்பதற்கான 30 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக் கொண்டது.

இதையடுத்து, ரஷ்ய ஜனாதிபதி புடினை (Vladimir Putin) தொலைபேசியில் தொடர்புகொண்ட டிரம்ப், போர் நிறுத்தம் தொடர்பாக விரிவான பேச்சு நடத்திய நிலையில், மேலும், இருதரப்பிலும் சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், ட்ரம்ப்பை ஜெலன்ஸ்கி தொலைபேசியில் தொடர்பு பேசியுள்ள நிலையில் அப்போது, போர் நிறுத்தம் குறித்து புடின் கூறியது பற்றி கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவிக்கையில், “ரஷ்ய இராணுவ வீரர்கள் பெலாரஸில் உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அவர்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது. 

 

Related Post

பிரபலமான செய்தி