பதவி விலகிய இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் !

user 12-Mar-2025 இலங்கை 109 Views

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.காண்டீபன் அக்கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து கட்சியின் பதில் பொதுச் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,

சி.காண்டீபன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், ம.தெ.எ.பற்று பிரதேச சபை, எருவில் வட்டாரம். எனும் விபரமுடைய நான் தங்கள் மேலான கவனத்துக்கு அறியத்தருவது யாதெனில் இலங்கைத் தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் எருவில் வட்டார தமிழரசு கட்சியின் வட்டார கிளைக்குழு தலைவராகவும் பிரதேசக் கிளை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றேன்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலில் எருவில் வட்டாரத்தில் போட்டியிட்டு அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆணையைப்பெற்று சிறந்த முறையில் மக்களுக்கு சேவையாற்றி கட்சி வளர்ச்சிக்காகவும் செயற்பட்டுள்ளேன்.

எனக்கு இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தகுந்த காரணங்கள் எதுவுமின்றி மாற்றுக் கட்சியில் இருந்து தமிழரசுக் கட்சியில் இணைந்த களுவாஞ்சிகுடி வட்டார வேட்பாளரை தவிசாளர் ஆக்குவதற்கு நான் இடையூறாக இருப்பேன் என்கின்ற ஒரே காரணத்துக்காக கட்சியின் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாக எனக்கு வேட்பாளராக இடம் தராமல் புறக்கணிக்கப்பட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டேன்.

இது சம்பந்தமாக கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவருக்கும் அச்சமயம் எழுத்து மூலம் அறிவித்தும் இன்று வரை சம்பந்தப்பட்ட எவரிடம் இருந்தும் எவ்வித பதிலும் கிடைக்காமல் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளேன்.

அந்த வகையில் அரசியல் நடைமுறைக்கு மாறாகவும் ஜனநாயகப் பண்புகளுக்கு முரணாகவும் கட்சி செயற்பட்டுள்ளதாலும் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி முரண்பாடுகளினால் மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கு குறைந்துள்ளது.

மக்கள் கட்சியில் அதிருப்தி அடைந்துள்ளதாலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால அங்கத்துவத்தில் இருந்தும் கட்சியில் நான் வகித்து வரும் சகல பதவிகளிலிருந்தும் மிகுந்த மனவேதனையுடன் எனது சுயவிருப்பின் பேரில் பதவி விலகல் செய்கின்றேன் என்பதை இத்தால் அறியத் தருகின்றேன் - என குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

Related Post

பிரபலமான செய்தி