25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் ஊழல் இடம்பெறாது!

user 06-Dec-2025 இலங்கை 24 Views

நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற 25,000 ரூபா கொடுப்பனவில் யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான ஊழல்களும் இடம்பெறாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) மாலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம் தொடர்பான அறிக்கையானது கடந்த 30.11.2025 அன்று தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம் 25 மாவட்டங்களுக்குமான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,624 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிக்கையிட்டிருந்தோம். அந்த அறிக்கையின் பிரகாரம் 365.6 மில்லியன் ரூபா எமது மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

05.12.2025 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதத்தின் பிரகாரம், முன்னைய சுற்றறிக்கையை விட மேலதிக விடயங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதாவது, முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகள் மற்றும் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாவிட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகியவற்றையும் இந்தக் கொடுப்பனவுக்கான தகுதிக்குள் உள்ளடக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் ஆகியோரின் பரிந்துரை மற்றும் கையொப்பங்களைப் பெற்ற, தகுதியான பயனாளிகளுக்கு மாத்திரமே கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சரியான முறையில் அந்த 25,000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட பின்னர், மேலதிகமாக நிதி ஒதுக்கீடு எங்களிடம் எஞ்சியிருக்குமாயின், அந்த நிதியானது மீண்டும் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்திற்கு எம்மால் அனுப்பி வைக்கப்படும்.

தற்போது கிடைக்கப்பெற்ற கடிதங்கள், சுற்றறிக்கைகள் என்பவற்றுக்கு அமைவாகப் படிவங்களை நிரப்புவதன் ஊடாகத் தங்களது பிரதேசங்களில் இருக்கின்ற பயனாளிகளைப் பிரதேச செயலாளர்கள் அடையாளம் கண்டு வருகின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 7.9 வீதமானவர்கள் இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணமானது அதிகளவான சனத்தொகையைக் கொண்ட மாவட்டம். ஆகையால் இந்தப் பாதிப்புக்கான நிதி ஒதுக்கீடாக எமக்கு 365.6 மில்லியன் ரூபா கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த வெள்ள அனர்த்ததின்போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இரவு பகல் பாராது அர்ப்பணிப்போடு செயற்பட்டார்கள்.

Related Post

பிரபலமான செய்தி