‘இயேசுவின் வரலாற்றினை நீங்கள் எழுத வேண்டும்’ என்ற கோரிக்கை அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கவிஞர் கண்ணதாசனிடம் கிறிஸ்தவ நண்பர்கள் பலரால் முன்வைக்கப்பட்டது. அவர்கள் வேண்டுகோளை கவிஞர் ஏற்றுக்கொண்டார்.
கண்ணனின் காதலனாக, ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ படைத்தவராக இருந்தாலும், அவர் மனம் குறுகியதல்ல. எல்லா உயிர்களிலும் இருக்கும் இறைவன் ஒருவனே என்னும் தத்துவத்தை தன் வாழ்வில் கடைபிடித்துக் காட்டியவர் கவிஞர்.
இந்தியாவில் சென்னையில் இருந்தால் எழுத்து வேலைக்கு இடைஞ்சல் ஏற்படக்கூடும் என்பதால், நண்பர்கள் அவரை குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று எழுத வைத்தார்கள்.
அருட்தந்தையர்கள் ஸ்தனிஸ்லாஸ், ஜோர்ஜ் ஆகியோர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைப் படித்து சொல்லச் சொல்ல, 15 நாட்களில் 7000 வரிகள் கொண்ட காவியத்தைக் கவிஞர் எழுதி முடித்தார். அவருடைய பெருமை இத்துடன் நிற்கவில்லை. பொதுவாக தங்கள் படைப்பில் அடுத்தவர் அறிவுரை சொல்லி மாற்றுவதனை எந்த படைப்பாளியும் விரும்புவதில்லை. ஆனால், கவிஞர் அனைத்திலும் விதி விலக்கல்லவா…?
தனது படைப்பினை, விவிலியத்தில் தேர்ச்சி பெற்ற கிறிஸ்தவ சான்றோர்கள் படித்துப் பார்த்து, குறைகள், தவறுகள் இல்லாதிருக்க ஆலோசனைகள் கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்!
அவ்வாறே, பதினொரு கிறிஸ்தவ அறிஞர்களைக் கொண்ட குழுவொன்று எட்டு முறை கூடிக் காவியத்தைப் பல கோணங்களில் ஆராய்ந்து திருத்தங்களை சமர்ப்பித்தது.
அந்த திருத்தங்களை ஏற்று தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்ய, மீண்டும் கவிஞர் திருச்சி சென்று ஒரு வார காலம் தங்கினார். அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, உரிய மாற்றங்களைச் செய்தார். இயேசு காவியம் நூல் வெளியீட்டு விழாவினை மிகப்பெரிய அளவில் நடத்த விரும்பினார்கள்.. ‘அமெரிக்கா செல்கிறேன் வந்தவுடன் விழாவை வைத்து கொள்ளலாம்’ என்று சொல்லி சென்ற கவிஞர் அமெரிக்காவில் இருந்து வரவே இல்லை என்பது வேதனை தரும் விடயம்.
ஆனாலும், அடுத்த ஆண்டு திருச்சியில் மிகப்பெரிய விழாவினை நடத்தி மதுரை பேராயர் நூலை வெளியிட, அப்போது தமிழக முதல்வராக இருந்த எம் ஜி ஆர் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
திரைப்படங்களில் கிறிஸ்தவ கருத்துக்கள் கொண்ட பாடலை எழுதுவது என்றாலும் கவிஞருக்கு அது இயல்பானதாக இருந்தது.
‘கண்ணே பாப்பா’ என்னும் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இயேசு கிறிஸ்துவின் பெருமையை, எளிதாக, அழகாக, ஆழமாக, சொன்ன பாடல்.
“சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்!
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் இயேசுவின் கீதம்!
அது வானகம் பாடிய முதல் பாடல் அந்த தூதுவன் ஆடிய விளையாடல்…..
மேய்ப்பவன் அவனே! ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்! மன்னவன் அவனே! மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்!
மேரி மாதா தேவ மகனை காத்தது எப்படியோ… தேவதூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே..!
அவன் ஆலயம் என்பது நம் வீடு! மணியோசையில் கேட்பது பண்பாடு!
மேய்ப்பவன் என்று தேவனுக்கு பெயர் வந்தது, அவர் ஆட்டுக்குட்டியை கையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகளை மேய்ப்பதாலா…?
ஆட்டுக்குட்டி என்பது ஒரு குறியீடு அவ்வளவுதான்
..”வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்… வந்தவர் வீட்டில், கண்டவர் நெஞ்சில் கருணை ஒளிப் பொங்கும்…! ராஜவாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே! நாளை அல்ல தேவன் கருணை இன்றே கைகளிலே!
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு ஒரு பாவமும் நம்மை அணுகாது!”
“அர்த்தமுள்ள இந்துமதம்” நூலில் ஆழமான கருத்துக்களை அனாயாசமாக எழுதிய கவிஞர், இப்பாடலை எழுதும் பொழுது ஒரு கிறிஸ்தவராகவே மாறி எழுதி இருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது..
இயேசு மீது ஆழ்ந்த பக்தியுள்ள கிறிஸ்தவ பேராசிரியர் ஒருவர் ஒருமுறை சொன்னார். “எந்நேரமும் இயேசுவை நினைத்துக் கொண்டிருக்கும் என்னால் கூட, அவர் பெருமையை, இவ்வளவு எளிமையாக, இனிமையாக சொல்ல முடியாது. தினமும் காலையில் ‘கிருஷ்ண பிரபோ’ என்று சொல்லியே கண் விழிக்கும் அளவுக்கு கண்ணன் மீது அபிமானம் கொண்ட ஒருவர் இப்படி கிறிஸ்தவ பாடலை எழுதியிருப்பது நம்ப முடியாத வியப்பாக இருக்கிறது… “!
இந்த வியப்பு அவருக்கு மட்டுமல்ல… நம் எல்லோருக்கும் தான் தமிழ்த்தாய் கவிஞருக்கு மட்டும் அப்படி ஒரு வரத்தினை தந்திருந்தாள்.