ஈரான் மீது தரைவழி தாக்குதல் உயிரிழப்பு 787 ஆக உயர்வு...

user 04-Mar-2026 சர்வதேசம் 43 Views

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின்; உக்கிர வான் தாக்குதல்கள் தொடர்வதோடு பிராந்திய நாடுகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் ஈரான் நேற்று (03) சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும் தாக்கியுள்ளது.

இந்தப் போர் லெபனானுக்கும் பரவி இருக்கும் சூழலில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய படைகள் எல்லையை தாண்டி ஊடுருவ ஆரம்பித்துள்ளன.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்த நிலையில் புரட்சிக் காவல் படையின் கட்டளையகம் மறறும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளையகம் நேற்று இந்தத் தகவலை வெளியிட்டபோதும் அது குறித்த எந்த ஆதாரத்தையும் தெரிவிக்கவில்லை.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த திங்கள் இரவு தொடக்கம் தொடர்ச்சியாக வெடிப்புச் சத்தங்கள் கேட்டு வருவதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்பஹான் மற்றும் ஷிராஸ் நகரங்களிலும் வெடிப்புகள் இடம்பெற்றதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் படைகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் அவிசாய் அட்ராயீ குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஈரானின் உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவனைகளை இலக்கு வைத்து பெரும்பாலான தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் எண்ணிக்கை தற்போது 787 ஆக அதிகரித்திருப்பதாக ஈரான் செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.

 

ஈரானின் 153 நகரங்கள் மீது தாக்குதல் இடம்பெற்றிருப்பதாகவும் 500இற்கும் மேற்பட்ட தளங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை போர் வெடித்தது தொடக்கம் பிரதான நகரங்கள் தொடக்கம் சிறு நகரங்கள் வரை 1,000க்கும் அதிகமான தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த சனிக்கிழமை தெற்கு நகரான மினாபில் இருக்கும் பெண்கள் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் கொல்லட்ட 165 பாடசாலை சிறுமிகள் மற்றும் ஊழியர்களின் இறுதிக் கிரியை நேற்று இடம்பெற்றது.

ஈரானுக்கு எதிரான போருக்கு ஆண்டுகள் எடுத்துக் கொள்ளாது என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். இந்தப் போர் பிராந்தியம் எங்கும் பரவி இருப்பதோடு இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களை ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போருக்கு நான்கு தொடக்கம் ஐந்து வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்தில் குறிப்பிட்டிருந்தார். எனினும் அது தொடக்கம் அவர் ஈரானுக்கு எதிரான பரந்த போர் ஒன்று பற்றி கூறி வருகிறார்.

 

பிராந்தியத்தின் முந்தைய போர்கள் போன்று இந்தப் போர் பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பதை நெதன்யாகு நிராகரித்துள்ளார். ‘இது விரைவானதும் தீர்க்கமானதாகவும் இருக்கும் என்று குறிப்பிட முடியும். இதற்கு சில காலம் எடுத்துக் கொள்ளும், ஆனால் ஆண்டுகள் செல்லாது. இது முடிவற்ற போர் அல்ல’ என்று நெதன்யாகு, பொக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இஸ்ரேல் ஊடுருவல்

இதேவேளை இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனானில் மேலதிக துருப்புகளை நிலைநிறுத்தி இருப்பதோடு ஹிஸ்புல்லாவின் தாக்குதலில் இருந்து இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் மூலோபாய தளங்களை பாதுகாப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து லெபனான் இராணுவம் எல்லையில் இருந்து விலகியதாக அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து லெபனானின் மேலதிக நிலைகளை நோக்கி முன்னேறி அவற்றை கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் அளித்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ராயேல் காட்ஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடந்த 2024 நவம்பர் தொடக்கம் இஸ்ரேலியப் படை தெற்கு லெபனானில் ஐந்து நிலைகளை ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேல் நேற்று சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னதாக பெய்ரூட் புறகர் மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை நடத்திய கடுமையான தாக்குதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டு மேலும் 154 பேர் காயமடைந்ததாக லெபனான் அரச ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்பாடுகளுக்கு லெபனான் அரசு தடை வித்தபோதும் இஸ்ரேலின் மூன்று இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு நேற்று தெரிவித்தது.

கோலன் குன்றில் இருக்கும் நபா தளத்தின் மீது ஓரே தடவையில் பல ஏவுகணைகளை வீசி தாக்கியதாகவும் வடக்கு இஸ்ரேலில் இருக்கும் மெரோன் மற்றும் ரமாட் டேவிட் விமானத் தளங்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் இராணுவ தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

தூதரகமும் இலக்கு

அமெரிக்க இராணுவத் தளங்களை வைத்திருக்கும் பிராந்திய நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்வதோடு நேற்று சவூதி அரேபிய தலைநகர் ரியாதில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் மீது இரு ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் அங்கு தீ பரவி இருப்பதோடு ஓமானின் துனும் வர்த்தக துறைமுகத்தில் எரிபொருள் தொட்டி ஒன்றும் ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தாக்குதலால் தூதரக வளாகத்திற்கு சிறிய பொருட்சேதங்கள் ஏற்பட்டதாக சவூதி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதலால் ரியாதில் வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கும் பகுதியில் இருந்து கறும்புகை மேலெழுந்ததை காணமுடிந்ததாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்தப் பகுதியில் வான் பாதுகாப்பு அமைப்பு மேலும் நான்கு ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக சவூதி இராணுவத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேநேரம் வர்த்தக துறைமுகத்தில் எரிபொருள் தொட்டி ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் சிறு பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஓமான் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இந்தப் பகுதியில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெறும் இரண்டாவது தாக்குதலாக இது இருந்தது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிக் காவல் படை நேற்று தெரிவித்தது. ‘பஹ்ரைனின் ஷெய்க் இசாவில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தின் மீது பெரும் அளவான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் புரட்சிக் காவல் படை அறிவித்துள்ளது’ என்று ஈரானின் இர்னா செய்தி நிறுவனம் டெலிகிராமில் குறிப்பிட்டுள்ளது.

Related Post

பிரபலமான செய்தி