பலஸ்தீனத்தில் உள்ள காசா மக்களை வெளியேற்றி அங்கு இஸ்ரேலியர்களை குடியமர்த்த வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தை இஸ்ரேலிய நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், காஸா பகுதியை மொத்தமாக வெற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அந்த வார்த்தைக்கு நாம் பயப்படக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் தீவிர தேசியவாத மத சியோனிசம் கட்சியை வழிநடத்தும் வலதுசாரி கொள்கையை கொண்ட ஸ்மோட்ரிச், சமீப காலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகின்றார்.
பலஸ்தீனத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவிப்பதற்கு இரண்டு மில்லியன் காஸா மக்கள் பட்டினி கிடப்பது நியாயமானது என்று கடந்த ஒகஸ்ட் மாதம் அவர் கூறியிருந்தார்.
காஸாவில் குடியிருக்கும் 2.4 மில்லியன் மக்களை கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என்ற கருத்தை இவர் தீவிரமாக முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.