சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லாத நிலையில் அவர் தற்போது பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பதியை கொண்டுவருவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்ற பின்னர் நிஹால் கலப்பதியை அப்பதவிக்கு கொண்டுவருவதே ஜே.வி.பியின் திட்டமாக இருந்ததாக கருதப்படுகிறது.
அதன் காரணமாகவே அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்படாமல் இருந்திருக்க கூடும்.
மேலும் தென்மாகாண முதன்மை வேட்பாளராக அவரை களமிறக்கும் உத்தேசத்தை தேசிய மக்கள் சக்தி கொண்டிருந்த நிலையில், இறுதியில் அவர் தேசிய பட்டியல் உறுப்பினராக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது தேசிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினரான நிஹால் கலப்பதி அடுத்த சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறு அல்லாவிட்டால் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம்.
முன்னதாக மகிந்த ராஜபக்ச ஆட்சியின்போதும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போதும் சபாநாயகர்களாக செயற்பட்ட தரப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்ச ஆளுங்கட்சிக்கு சார்பாகவே செயற்பட்டார் எனவும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது சபாநாயகராக பதவி வகித்த மகிந்த யாப்பா அபேவர்தன, தனது அலுவலகத்தை குடும்ப உறுப்பினர்கள்மூலம் நிரப்பினார் என்றும் எதிர் தரப்புகள் வாதிட்டிருந்தன.