தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக வைத்து, ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பாராளுமன்றத் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில், அவர்கள் அடுத்து வரும் காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பரென எதிர்பார்க்கிறோம்.
எற்கனவே மைத்திரி – ரணில், கூட்டு அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலிருந்து, புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளதாக தேசிய மக்கள் சக்தியினர் அறிவித்துள்ளனர்.
ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ள இந்த இடைக்கால அறிக்கை, தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இல்லை.
எனவே, இடைக்கால அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதால், எந்தவிதமான முடிவுகளுக்கும் அவர்கள் செல்ல முடியும்.
தமிழ் மக்களின் விருப்பத்துக்கு மாறாகவே இவர்கள் செயற்படுகின்றனர்.இதை அவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
இந்நிலையில், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுக்கான வரைவை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இவ் வரைபு தயாரிக்கப்பட்ட போது, சுமந்திரன் தவிர ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
துரதிர்ஷ்டவசமாக தொடர்ச்சியாக அவர்களின் பங்கேற்பு முழுமை பெறும் வரையில் நீடித்திருக்கவில்லை.
தமிழ் மக்கள் பேரவையின் வரைபை கொள்கை அளவில் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளதால், அதனை மையப்படுத்தி பேச்சுக்களை ஆரம்பிப்பது பொருத்தமானதாக இருக்கும்.
இந்தச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும் ஏனையவர்கள் அதில் பங்கேற்பதற்குமான பகிரங்க அறிவிப்பை விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.