யாழ். மாவட்டத்தை வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று (27) யாழ். மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், '' வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நாம் நேரில் சென்று பாா்வையிட்டோம். எதிர்வரும் காலங்களில் யாழ். மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டமிட்டு கணிசமான மாற்றங்களை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனும், யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவும் தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.