வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) காலை மன்னார் நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை மன்னார் தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியுள்ளது.
மன்னார் (Mannar) நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையிலான குழுவினர் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகரசபை தேர்தலில் மாத்திரமே போட்டியிடும் நிலையில் இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக போட்டியிட்டு மன்னார் நகர சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் (Jafffna) உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டுயிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ் மாவட்டத்தின் 17 சபைகளிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளது.
இதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் யாழ் தேர்தல் திணைக்களத்தில் இன்று (12.03.2025) காலை செலுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு முழுவதும் சைக்கிள் சின்னத்தில் தமது கட்சி போட்டியிட உள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
நேற்று (11) மதியம் யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் குறித்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார்.