தென்கொரியாவில் (South Korea) நேற்று (03) இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த அந்த நாட்டு ஜனாதிபதி யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.
முன்னதாக, இந்த அவசர நிலை அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.
அத்துடன் . எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த சில மணி நேரங்களில், அவசர நிலை அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கொரியாவில் அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை தாக்கல் செய்வதில் அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த நிலையிலேயே, கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அவசர நிலையை நடைமுறைபடுத்துவதாக ஜனாதிபதி யூன் சுக் அதிரடியாக அறிவித்திருந்தார்.
வட கொரியாவின் கொம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் தாம் அவசரக்கால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதாக, தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இல்லை.. சிறப்பு விசாரணைகள் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.