தமிழரசு கட்சியின் எம்பிக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் !

user 06-Dec-2024 இலங்கை 169 Views

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே கவனத்தில் கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) குறிப்பிட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தனர்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இராசமாணிக்கம் சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகநாதன் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், இளையதம்பி சிறிநாத், துரைராசா ரவிகரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இது குறித்து சிறீதரன் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், "இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசினோம். சமஷ்டி அடிப்படையிலான தீர்வு தொடர்பில் புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போதே கவனத்தில் கொள்ள முடியும் என அவர் எம்மிடம் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருட இறுதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எம்மிடம் உறுதியளித்தார். அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் அவர் எம்மிடம் எதுவும் கூறவில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நீதிமன்ற உத்தரவின் படி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். காணாமல் போனோர் விடயத்தில் தம்மால் உடனடியாக எதுவும் செய்ய இயலாது என்றும், படிப்படியாக அந்த விடயத்துக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம் என்பவற்றின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்து பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டார். காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்" என்றார்.

 

 

 

 

 

Related Post

பிரபலமான செய்தி