கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமைய போகிறது. நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது.
அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் உள்ள 19 உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 10 உறுப்பினர்களாவது ஒன்றிணைந்து வரவுள்ள ஒற்றையாட்சியை எதிர்க்க வேண்டும்.
அதற்காகவே தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து, வரவுள்ள அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாட முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்’’ என்றார்.